ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 03

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 3

ஆசிரியர் கூறுகிறர்கள்:-

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு அஸ்திவாரம் இருக்கும், மார்க்கத்தின் அஸ்திவாரம் அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் பற்றி அறிந்து கொள்வது தான்.இந்த அஸ்திவாரம் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடத்தை அது உறுதியாக சுமக்கும்  அழிவிலிருந்து கட்டிடம் இடிந்து சுக்குநூறாவதிலிருந்தும் அது பாதுகாக்கும்.

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ் தனது ஃபவாயித் என்ற நூலில் :-

யார் தன்னுடைய கட்டடம் உயரமாக கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர் தன்னுடைய அஸ்திவாரத்தை உறுதியாகவும் நேர்த்தியாகவும் இடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கட்டடத்தின் உயரம் என்பது அஸ்திவாரத்தின் நேர்த்தியிலும் உறுதியிலுமே தங்கி இருக்கிறது.

நாம் செய்யக்கூடிய அமல்கள் கட்டடம் போன்றது அதன் அஸ்திவாரமாக ஈமான் இருக்கிறது.எந்த அளவுக்கு அஸ்திவாரம் உறுதியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த கட்டடம் உயர்ந்து செல்லும்.உறுதியான அஸ்திவாரம் உள்ள கட்டடத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் வெடிப்போ அல்லது ஏதேனும் தீங்கோ ஏற்பட்டால் அதை மீண்டும் கட்டுவது எளிதானது.

அஸ்திவாரம் உறுதியாக இல்லாவிட்டால் அது அசைந்து விட்டால் கட்டடம் இடிந்து விழுந்து விடும் அல்லது விழும் நிலைக்கு வந்து விடும்.

ஒரு புத்திசாலியின் கவலையும் ஆசையும் தனது அஸ்திவாரத்தை சரி செய்வதிலும் சீர் செய்வதிலும் தான் இருக்கும்.

அறிவில்லாதவன் அஸ்திவாரத்தை கவனிக்காமல் கட்டடத்தை கட்டுவதில் கவனம் செலுத்துவான். அவனுடைய கட்டடம் எப்போதும் விழும்நிலையிலேயே இருக்கும்.

அல்லாஹ் குர்ஆனில்

ஸூரத்துத் தவ்பா 9:109

اَفَمَنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى تَقْوٰى مِنَ اللّٰهِ وَرِضْوَانٍ خَيْرٌ اَمْ مَّنْ اَسَّسَ بُنْيَانَهٗ عَلٰى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهٖ فِىْ

نَارِ جَهَـنَّمَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏

யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.