ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36

ஸீரா பாகம் – 36

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) வின் அழகு

💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர்,  கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் கொண்டவர், கூட்டுப்புருவம் கொண்டவர், கருண்ட தலைமுடி கொண்டவர், அவரது அமைதி கம்பீரத்தை தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர், தூரமாகப் பார்த்தால் அழகும் வனப்பும் பெற்றவராய்த் திகழ்வார், அருகில் சென்றால் பழக இனிமையானவர், நற்பண்பாளர், நாவலர், தெளிந்த நடையுடைய பேச்சாளர், நீளமாகவோ சுருக்கமாகவோ இல்லாமல் நடுத்தரமான சொல்லாற்றல் பெற்றவர், அவருடைய மொழிதல் மணிமாலை உதிர்வது போல் இருக்கும், நடுத்தர உயரமுடையவர், பார்வைக்கு நெட்டையாகவோ குட்டையாகவோ இருக்க மாட்டார், இரண்டு கிளைகளுக்கு இடையிலுள்ள ஒரு கிளையைப் போன்றவர், மூவர் குழுவில் பளிச்செனத் தெரிபவர், சிறந்த கண்ணியம் வாய்ந்தவர், நண்பர்கள் புடை சூழ இருப்பவர், அவர் உரைத்தால் யாவரும் செவிமடுக்கின்றனர், அவர் ஆணையிட்டால் நிறைவேற்ற விரைகின்றனர், பணிவிடைக்குரியவர், மக்கள் கூட்டம் பெற்றவர், கடுகடுப்பானவருமல்லர், பிறரை குறைவாக மதிப்பவரும் அல்லர் (ஜாதுல் மஆது).