ஜனாஸா சட்டங்கள் 10

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 10

மரண தருவாயில் சூரா யாசீன் ஓதுவது 

معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم أنه قال: “اقرأوا على موتاكم يس

உங்களில் மரண நேரத்தில் உள்ளவருக்கு யாசீன் ஓதிக்கொடுங்கள் (அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா . இமாம் அல்பானியே இதை லயீஃப் என்று அறிவித்துள்ளார்கள்)

இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் அபூதாவூத் அவர்கள் كتاب الجنائز இல் باب الجنائز عند الموت என்ற தலைப்பில் இந்த ஹதீஸை மரணத்தை நெருங்குபவருக்கு யாசீன் ஓதவேண்டும் என்று இந்த ஹதீஸை குறிப்பிட்டிருக்கிறார்கள். 

இமாம் இப்னு மாஜா அவர்கள் ஒரு நோயாளி மரணத்தை நெருங்கினால் இதை ஓதவேண்டும் என்று குறிப்பிட்டு இந்த ஹதீஸை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மரணித்தவருக்காக சூரா யாசீனோ அல்லது குர்ஆன் ஓதுவதும் மரணித்துக்கொண்டிருப்பவரிடம் சூரா யாஸீனை ஓதும்படியும் அவரை கிஃப்லாவின் பக்கம் முகம் திருப்பி வைக்கும்படியும் வந்துள்ள நபிமொழிகள் எதுவும் சரியானதல்ல.

சட்ட வல்லுனரும் தாபியீன்களில் தலைசிறந்தவரும் மார்க்கத்தீர்ப்பு வழங்குபவருமாக இருந்த சயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் மரண தருவாயில் கிஃப்லாவின் பக்கம் முகத்தை திருப்பி வைப்பது  விரும்பத்தகாதது என தீர்ப்பளித்தார்கள். 

சயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் மரணத்தருவாயில் இருந்தபோது அபூஸலமத் இப்னு அப்துற் ரஹ்மான் அவர்கள் பக்கத்திலிருந்தார்கள். சயீத் அவர்கள் மயக்கமடைந்தபோது அன்னாரின் படுக்கையை கிஃப்லாவின் பக்கம் முகம் வருமாறு திருப்பக் கூறினார்கள். அவ்வாறு செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின் சயீத் இப்னு முஸய்யப் அவர்கள் உணர்வு பெற்று என் படுக்கையைத் திருப்பினீர்களா? எனக்கேட்டார்கள். ஆம்! என பதிலளிக்கபட்டது. அபூஸலமாவின் பக்கம் பார்த்து “நீர் தான் இவ்வாறு செய்யச் சொன்னீரா? எனக்கேட்டார்கள். ஆம்! எனக் கூறியவுடன் பழையபடி படுக்கையை மாற்றும்படி கட்டளையிட்டார்கள் என ஸுர்ஆ இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு அபீஷைபா, முஸன்னப்)

உயிருடனிருக்கும்போது நாம் தான் நமக்காக குர்ஆன் ஓத வேண்டும். நமக்காக பிறர் நமது மரணத்திற்கு பிறகு குர்ஆன் ஓதுவது நமக்கு எந்த நன்மையையும் தராது.