ஜனாஸா சட்டங்கள் 11

أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني 

ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும்  இமாம் அல்பானி (ரஹ்) 

பாகம் – 11

மரணித்தவருக்காக பக்கத்திலிருப்பவர் செய்யவேண்டியவை: 

உயிர் பிரிந்ததை தெரிந்து கொள்ளும் அடையாளங்கள் 

💠 நாடி பிடித்து பார்ப்பது

💠 இதயத்துடிப்பு நின்று விட்டால்

💠 காலின் பெருவிரல் மடங்கிவிடும்

மருத்துவர் ஒருவர் மரணித்துவிட்டார் என அறிவித்துவிட்டால் மரணித்தவரின் கண்களை மூடிவிட வேண்டும். 

உம்மு ஸலமா (ரலி) – அபூஸலமா (ரலி) மரணித்தபோது நபி (ஸல்) அங்கு வந்தார்கள் அப்போது அபூஸலமா (ரலி) அவர்களின் திறந்திருந்த கண்களை மூடிவிட்டு நபி (ஸல்) “ஒருவருடைய உயிர் கைப்பற்றப்பட்டால் அவருடைய உயிரை பார்வை தொடர்கிறது ஆகவே அவர்களது கண் விழித்தவாறு இருக்கும்” என்று கூறியபோது அபூஸலமா (ரலி) அவர்களது வீட்டிலிருந்தவர்கள் அழ ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) “நீங்கள் நல்லதையே சொல்லுங்கள் ஏனெனில் மலக்குமார்கள் நீங்கள் சொல்வதற்கு ஆமீன் கூறுகிறார்கள்” என்று கூறிவிட்டு 

” اللهم اغفر لأبي سلمة ، وارفع درجته في المهديين ، واخلفه في عقبه في الغابرين ، واغفر لنا وله يا رب العالمين ، وافسح له في قبره ونور له فيه”

اللهم اغفر لأبي سلمة

யா அல்லாஹ்! அபூஸலமாவிற்கு பிழை பொறுப்பாயாக! 

وارفع درجته في المهديين

நேர்வழி பெற்றவர்களின் அந்தஸ்த்தில் அவருடைய அந்தஸ்த்தை உயர்த்திவிடுவாயாக 

واخلفه في عقبه في الغابرين

மிஞ்சியிருக்கக்கூடியவர்களில் இவருக்கு நீ பகரத்தை ஏற்படுத்துவாயாக 

واغفر لنا وله يا رب العالمين

எங்களுக்கும் அவருக்கும் நீ பாவங்களை பொறுப்பாயாக 

وافسح له في قبره

அவருடைய கப்ரை விஸ்தீரணப்படுத்துவாயாக 

ونور له فيه

அவரது கப்ரை ஒளிமயமாக ஆக்குவாயாக.

(முஸ்லீம், அஹமத்)

மரணித்தவரின் உடல் முழுவதையும் ஒரு துணியால் மூடிவிட வேண்டும். 

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது கோடிடப்பட்ட பருத்தி அல்லது கித்தான் என்ற துணியால் மூடப்பட்டிருந்தது(புஹாரி)

இஹ்ராம் அணிந்த நிலையில் உயிர் பிரிந்து விட்டால் அவரது தலையை மூட கூடாது. 

இப்னு அப்பாஸ் (ரலி) – ஒரு மனிதர் அரஃபா வில் ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்தவுடன் ஒட்டகம் மிதித்ததில் அங்கே அவர் மரணித்துவிட்டார்கள். நபி (ஸல்) இலந்தை இலை போடப்பட்ட தண்ணீரால் அவரை குளிப்பாட்டுங்கள். 2 துணியால் அல்லது அவரது 2 துணியால் அவரை நீங்கள் கபனிடுங்கள். அவருக்கு நறுமணம் பூச வேண்டாம் அவரது தலையையும் முகத்தையும் மூட வேண்டாம். நாளை மறுமையில் அவர் தல்பியா சொன்னவராக எழுப்பப்படுவார்.

மரணித்தவரை அடக்கம் செய்வதை தாமதிக்க கூடாது.

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மையத்தை அடக்கம் செய்வதற்கு அவசரப்படுத்துங்கள்(புஹாரி, முஸ்லீம்)

மரணித்தவரை மரணித்த ஊரிலேயே அடக்குவதே சிறந்தது.

இமாம் நவவி (ரஹ்) – ஒரு மைய்யித்தே நான் மரணித்ததற்கு பின் என்னை இன்ன ஊருக்கு கொண்டு செல்லுமாறு வஸிய்யத் செய்தாலும் அவர் மரணித்த ஊரிலேயே அவரை அடக்கம் செய்வது தான் சிறந்தது. 

ஆயிஷா (ரலி) அவர்களது சகோதரர் வாதி ஹபஷா என்ற இடத்தில் மரணித்தபோது அவர் மதீனாவிற்கு கொண்டுவரப்பட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த ஜனாஸாவை அங்கேயே அடக்கியிருக்கலாமே அதை தான் நான் விரும்பினேன் என்றார்கள்(பைஹகீ)